கடந்த 2019-ம் ஆண்டு மும்பையில் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 66 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அப்போது 14 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
14 வயது வீரர் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா இந்திய அளவில் பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 வீரரும் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.
பின்னர் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இப்படி தொடர் சாதனைகளை நிகழ்த்திவரும் பிரக்ஞானந்தா தற்போது செஸ் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
இந்த தொடரில் அவர் உலக தரவரிசையில் முன்றாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவையும், இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை சந்திக்கவுள்ளார்.
இந்த நிலையில், 80,90களின் காலத்தில் செஸ் உலகை ஆண்ட செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் பிரக்ஞானந்தாவையும் அவரின் தாயாரையும் புகழ்ந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள அவர், பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்துகள். என் அம்மா எனது அத்தனை போட்டிகளிலும் என்னுடன் வந்திருக்கிறார் என்ற முறையில் சொல்கிறேன். தாயின் துணை மிகச் சிறப்பானது. சென்னையைச் சேர்ந்த இந்த இளைஞர் நியூயார்க் கவ்பாய்ஸ் இருவரை வீழ்த்தியுள்ளார். மிகச் சிக்கலான தருணங்களிலும் கூட பிரக்ஞானந்தா திடமாக இருந்துள்ளார்" எந பாராட்டிள்ளார். 1980களில் பலமுறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் என்பது குறிப்பிடத்தக்கது.