5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அதே போல இந்த தொடரில் யார் அதிக ரன்கள் குவிப்பர், யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிக ரன்கள் குவித்த வீரராக இருப்பர் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதால் அந்த அணிக்கு அதிக சாதகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதே போல ஆசிய அணிகளும் இந்த தொடரில் சிறப்பாக செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளின் வீரர்கள் இந்தியாவில் அதிக காலம் இருந்ததால் அவர்களும் சிறப்பாக செயல்பட முடியும்.
இந்த தொடரில், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகிய மூவருமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிக ரன்கள் குவிப்பர் என நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் மூன்றுவிதமான போட்டியிலும் சிறப்பாக செய்யப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.