கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து தற்போது FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லீக் சுற்றில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி, 7-வது இடத்தில் இருக்கும் கனடா, 8-வது இடத்தில் இருக்கும் பிரேசில் போன்ற அணிகள் வெளியேறின. அதனைத் தொடர்ந்து 'ரவுண்ட் ஆப் 16' ஆட்டத்தில் நான்கு முறை உலககோப்பை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்கா - ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது.
இதில் இரு அணிகளும் அபார ஆட்டம் ஆடின. பலமுறை அமெரிக்க அணி ஸ்வீடன் அணியின் கோல் போஸ்டை நோக்கி தாக்குதல் நடத்தியும் வலுவான ஸ்வீடன் அணியின் தடுப்பாட்டம் காரணமாக அமெரிக்க அணியால் அணியால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் ஆட்டநேரம் முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற நிலையில் இருந்தன.
இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட ஸ்வீடன் அணி 5-4 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு 'ரவுண்ட் ஆப் 16' ஆட்டத்தில் ஜப்பான் அணி நார்வெ அணியையும், நெதர்லாந்து தென்னாபிரிக்கா அணியையும் , ஸ்பெயின் ஸ்சுவிச்சர்லாந்து அணியையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.