விளையாட்டு

இறுதியில் பணிந்த ஒன்றிய அரசு.. ஆசிய விளையாட்டு போட்டிக்கு கால்பந்து அணியை அனுப்ப ஒப்புதல் !

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகளை ஆசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்ப ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இறுதியில் பணிந்த ஒன்றிய அரசு.. ஆசிய விளையாட்டு போட்டிக்கு கால்பந்து அணியை அனுப்ப ஒப்புதல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே கோலோச்சி வந்த நிலையில், சமீப ஆண்டுகளில் பிற விளையாட்டுகளுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதோடு ஐபிஎல் பாணியில், கால்பந்து, கபடி, வாலிபால், இறகுப்பந்து ஆகிய போட்டிகளுக்கும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கால்பந்துக்காக தொடங்கப்பட்ட ஐ.எஸ்.எல் தொடர் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதோடு, இந்தியாவில் கால்பந்துக்கும் தற்போது ஆதரவு பெருகி வருகிறது. கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்திரி இந்தியாவில் பிரபலமான வீரராக மாறியுள்ளார். அவர் தலைமையில் சமீபத்தில் இந்திய கால்பந்து அணி, இன்டர்கான்டினென்டல் கோப்பை மற்றும் தெற்காசிய கோப்பையை வென்று அசத்தியது.மேலும், உலக தரவரிசையில் 100-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கால்பந்து அணி பங்கேற்க இந்திய அரசு அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இறுதியில் பணிந்த ஒன்றிய அரசு.. ஆசிய விளையாட்டு போட்டிக்கு கால்பந்து அணியை அனுப்ப ஒப்புதல் !

அதில், குழு போட்டிகளை பொறுத்தவரை ஆசிய தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ஆசிய தரவரிசையில் இந்திய அணி, 18 வது இடத்தில் உள்ள நிலையில், அரசின் அறிவிப்பு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்திய கால்பந்து அணி தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் சுனில் சேத்திரி போன்றோரும் அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கையை எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகளை ஆசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்ப ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், "தற்போதுள்ள அளவுகோலின்படி தகுதி பெறாத இரு அணிகளுமே ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கு வசதியாக இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .சமீபத்திய காலங்களில் கால்பந்து அணியின் செயல்பாடுகளை மனதில் கொண்டு, அவர்களுக்கு தளர்வு வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது"என்று கூறப்பட்டுள்ளது. .

banner

Related Stories

Related Stories