நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் தற்போது மகளிர் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜென்டினா அணியில் யமிலா ரோட்ரிக்ஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் தனது காலில் முன்னாள் அர்ஜென்டினா ஜாம்பவான் மரடோனாவின் உருவத்தையும், போர்த்துக்கல் வீரர் ரொனால்டோவின் உருவத்தையும் டாட்டுவாக வரைந்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸியின் உருவப்படத்துக்கு பதில், அவரின் போட்டியாளரான ரொனால்டோவின் உருவத்தை எப்படி டாட்டுவாக வரையலாம் எனக் கூறி அவரை அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும், மெஸ்ஸியை குறித்த அவரின் பழைய கருத்துக்களையும் தேடி கண்டுபிடித்து அவரை விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து கால்பந்து வீராங்கனை யமிலா ரோட்ரிக்ஸ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இரக்கமே இல்லாமல் நீங்கள் என்னை காயப்படுத்துகிறீர்கள். இதனை தயவுசெய்து நிறுத்துங்கள். நான் மெஸ்ஸிக்கு எதிரானவள் அல்ல. நமது தேசிய அணிக்காக மெஸ்ஸி ஒரு சிறந்த கேப்டன். ஆனால் என் இன்ஸ்பிரேஷனும், ரோல் மாடலும் எப்போதும் ரொனால்டோ தான். ஆனால், அதற்காக நான் மெஸ்ஸியை வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. உங்களுக்கு பிடிக்காத ஒருவர் எனக்கு முன்னுதாரன வீரராக இருக்கக்கூடாதா? இது கால்பந்து. இதில், நம்முடைய நாட்டை சேர்ந்த வீரரைதான் நேசிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் விமர்சனம் என்னை சோர்வடையச் செய்கிறது. நிறைய வலியை தருகிறது, நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.