அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார் . PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி PSG கிளப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார் என்றும், இதன் காரணமாக இந்த சீசன் முடிந்ததும் அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அறிவித்தார். இதன் காரணமாக மெஸ்ஸி அடுத்து எந்த கால்பந்து அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்த நிலையில் மெஸ்ஸி அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கிருஸ் அஸல் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி தனது முதல் போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டியில் 90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.
மேலும், கூடுதல் நேரமும் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில், இன்டர் மியாமி அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி மெஸ்ஸி அபார கோல் அடிக்க அரங்கமே ஆர்ப்பரித்தது. இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே ப்ரீ கிக் மூலம் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். அதன் பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், மெஸ்ஸியின் கோல் காரணமாக இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிருஸ் அஸல் அணியை வீழ்த்தியது. மெஸ்ஸியின் இந்த கோல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.