கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் உயர்ந்த போட்டியாகக் கருதப்படுவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிதான். இந்த கோப்பையை வாங்குவதுதான் ஒவ்வொரு அணிக்கும் கனவு. இந்த தொடரில் நாமும் இடம் பெற வேண்டும் என ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகவும் இருக்கும்.
இந்த உலகக் கோப்பை போட்டி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 1975ம் ஆண்டிலிருந்து உலக கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. முதல் முறையாக 1987ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.
அதன்பின்னர் 2011ம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இதையடுத்து நடந்து மூன்று தொடர்களிலும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. அதுவும் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் போட்டிகள் நடக்க உள்ளது. இந்தியாவில் உலகக் கோப்பை நடக்க உள்ளதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி கோப்பை வாங்க முடியாதது பல விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இதனால் இந்திய அணியில் இந்த இந்த வீரர்கள் இடம்பெற வேண்டும், இந்த வீரர் இருக்க கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்.எஸ்.தோனியால் மட்டும் எப்படி உலகக் கோப்பை வெல்ல முடிந்தது என இந்திய அணியின் சுழற்பத்து வீச்சாளர் அஷ்வின் கருத்து ஒன்று தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 10 ஆண்டுகளாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் பலருக்கும் இருக்கு. இன்னும் சில மாதங்களில் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளதால் அணியில் யார் யார் இருக்கணும் என்ற கருத்து சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எம்.எஸ்.தோனி மாதிரி ஒரு வெற்றிகரமான கேப்டன் கிடைக்காதா என்ற விவாதமும் எழுந்துள்ளது. எம்.எஸ்.தோனி என்ன பண்ணாரு தெரியுமா? அவர் ரொம்ப சிம்பிளாக அணியை வைத்துக் கொண்டார். ஒரு தொடருக்காக தேர்வு செய்கிற அதே 11 வீரர்களையே கடைசி வரை பயன்படுத்துவார். நீதான் டா ராஜா.. வாடா ராஜா.. என வீரரை உற்சாகப்படுத்துவார். அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற அந்த வீரரும் நன்றாக செயல்படுவார்" என தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.