22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் யாரும் எதிர்பாராத அணியாக இருந்த மொரோக்கோ வலுவான பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல் அணிகளை வீழ்த்தி வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணியாக சாதனை படைத்தது. இந்த தொடரில் அப்போது ஃபிபா தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பிரேசில் அணி அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
அதைத் தொடர்ந்து நட்பு ரீதியிலான போட்டியில் 5 முறை உலகக்கோப்பையை வென்ற அணியும் அப்போது ஃபிபா தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ சாதனை படைத்தது. இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக பிரேசில் அணியை மற்றொரு ஆப்ரிக்க அணியான செனக்கல் வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.
நேற்று நடைபெற்ற நட்புரீதியிலான போட்டியில் ஃபிபா தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பிரேசில் அணியும், 18-வது இடத்தில் இருக்கும் செனக்கல் அணியும் மோதின. இதில் எளிதாக பிரேசில் அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ப 11-வது நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்தது. ஆனால். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செனக்கல் அணி தொடர்ந்து 3 கோல்கள் அடித்தது.
பின்னர் பிரேசில் அணி மேலும் ஒரு கோல் அடித்த நிலையில், அந்த வீரர்கள், மேலும் ஒரு கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் செனக்கல் அணி இறுதி நிமிடங்களில் மற்றொரு அபார கோல் அடிக்க 4-2 என்ற கணக்கில் பிரேசில் அணிக்கு செனக்கல் அணி அதிர்ச்சி அளித்தது.