லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையாவது அதனை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது அங்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அசத்தியிருந்தார். ஆனால் இந்த முறை இருவரும் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர சமீப காலமாக இந்திய அணியில் சிறந்த நடுகள வீரராக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காயம் காரணமாக இந்திய அணி தடுமாறி வரும் என விமர்சனங்கள் எழுந்தன.
எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செய்லபட்டு வரும் அனுபவம் வாய்ந்த அஜின்கியா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர்.
ஆனால், ஜூன் 2 அல்லது 3ல் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதன் காரணமாக அவருக்கு பதிலாக இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மாவுடன் இங்கிலாந்து செல்லும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அந்த தகவல் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது நடந்துவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்ததோடு கடந்த ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்கு 5 ஆட்டங்களில் ஆடி 1 சதம், 1 அரைசதத்துடன் 404 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.