நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நாயகனாக இலங்கையின் இளம் பந்துவீச்சாளர் பதிரனா உருவெடுத்துள்ளார். பிரபல இலங்கை வீரர் மலிங்காவை போலவே வித்தியாசமான முறையில் பந்துவீசும் இவர் அவரைப் போலவே தொடர்ந்து சிறப்பாகவும் பந்துவீசி வருகிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் இறுதிக்கட்டத்தில் சிக்கனமான பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள அவர், இறுதிக்கட்டத்தில் தனது கூர்மையான யார்கர்களால் எதிரணி வீரர்களை திணறடித்து வருகிறார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பதிரனா நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.
பதிரனா குறித்துப் பேசிய தோனி, " பதிரானா போன்ற வித்தியாசமான ஆக்ஷன் கொண்ட பௌலர்களை எதிர்கொள்வது எப்போதுமே சவால்வாய்ந்தது. அவரின் வேகம், அவரது கன்சிஸ்டென்ஸி என அனைத்துமே அவர் பந்துவீச்சை எதிர்கொள்வதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது.
அவரை ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வைப்பதை இலங்கை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். மேலும் ஐசிசி தொடர்களுக்காக அவரை பாதுகாக்க வேண்டும்.கடைசியாகப் பார்க்கும்போது மிகவும் ஒல்லியாக இருந்தார். இப்போது தசைகளுக்கு இன்னும் வலுவேற்றியிருக்கிறார். அவர் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார்" என்று கூறியிருந்தார்.
20 வயதே ஆன பதிரனா இலங்கை அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ள நிலையில்,ஐபிஎல் போட்டியில் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட சென்னை அணியில் ஆடி வரும் அவரை இன்ஸ்டா கணக்கில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட இலங்கை வீரராக பதிரனா உருவெடுத்துள்ளார். அவரை தற்போது வரை 3 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவரின் இந்த பிரபலத்துக்கு சென்னை அணியின் ரசிகர்களே காரணமாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.