இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது பாதி ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 7 ஆட்டங்களில் அபாரமாக செய்யப்பட்ட சென்னை அணி அதன்பின்னர் அடுத்தடுத்த தோல்விகள், மழையால் ஒருபோட்டி ரத்து என சிறிது தடுமாறியது.
அதன்பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் பரம வைரியான மும்பை அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தோனி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய சென்னை அணி சீரான இடைவெளியில் சென்னை அணி விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே குவிக்க முடிந்த நிலையில், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியில் முதல் இரண்டாவது இடத்துக்கான போட்டியில் சென்னை அணி முன்னிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் டெல்லி அணியுடனான இந்த போட்டியில் சென்னை அணி ஒரு அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது சென்னை அணி 167 ரன்கள் குவித்த நிலையிலும் எந்த வீரரும் 25 ரன்களைத் தாண்டவில்லை. அதிகபட்சமான ஷிவம் துபே 25 ரன்கள் குவித்தார். ஆனால் அனைத்து வீரர்களும் சீரான ரன் குவிக்க சென்னை அணி 167 ரன்கள் என்ற சவாலான ரன்களை குவித்தது.
ஆனாலும் அதனை எட்ட முடியாமல் டெல்லி அணி தோல்வியடைந்தது. இதன்மூலம் எந்த வீரரும் 25 ரன்களைத் தாண்டாத நிலையிலும் சென்னை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இது வரை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் இதுபோல வெற்றிபெறாத நிலையில், சென்னை அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.