இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது பாதி ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 7 ஆட்டங்களில் அபாரமாக செய்யப்பட்ட சென்னை அணி அதன்பின்னர் அடுத்தடுத்த தோல்விகள், மழையால் ஒருபோட்டி ரத்து என சிறிது தடுமாறியது.
அதன்பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் பரம வைரியான மும்பை அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தோனி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய சென்னை அணி சீரான இடைவெளியில் சென்னை அணி விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே குவிக்க முடிந்த நிலையில், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இந்த சீசனில் சென்னை அணியின் வெற்றிக்கு சிவம் துபே முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் அவர் இதுவரை 10 இன்னிங்ஸில் 3 அரை சதங்கங்களுடன் 159.90 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 315 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அணியின் ரன்ரேட் அதிகரிக்க உதவினார்.
இந்த நிலையில் அதிக ரிஸ்க்கான ஷாட் ஆடுவதற்கு சிவம் துபேவின் ஆட்டம் சிறந்தவொரு உதாரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "எங்கள் அணி வீர்களிடம் அதிக ரிஸ்கான ஷாட் ஆடுமாறு தெரிவித்துள்ளோம். சில நேரங்களில் இந்த வகை அணுகுமுறையில் தவறு நடக்கும். ஆனால் இதன்மூலம் ரன்களை உயர்த்த முடியும். எங்கள் வீரர்கள் அதை செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
சென்னை அணியில் அதிக ரிஸ்கான ஷாட் ஆடுவதற்கு சிவம் துபேவின் ஆட்டம் சிறந்தவொரு உதாரணம். அவர் அபாரமாக அதிரடியாக ஆடுகிறார். அவருக்கு அடுத்து அணியில் ராயுடு மற்றும் தோனி ஆகியோர் அந்த பணியை செய்கின்றனர். அதுவே அணியில் வெற்றிக்கு உதவுகிறது" என கூறியுள்ளார்.