உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு அந்த அணிகள் சார்பில் ஏராளமான வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்ற்ன.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்த அளவிற்கு நெருக்கமாக மாறிவிட்டது என மேற்கிந்திய தீவுகள் அணிகள் அதிரடி வீரர் ரஸ்ஸல் கூறியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த அவர் 9 வருடங்களாக அந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அந்த அணியுடனான தனது உறவு குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில், "எனக்கு கணுக்காலில் அடிபட்டிருந்தபோது நான் விளையாடும் மற்ற டி20 அணிகளோ அல்லது எனது சொந்த நாட்டின் கிரிக்கெட் வாரியமோ எனது காலில் அடிபட்டதற்கு உதவ முன் வரவில்லை. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் என் செலவுகளை ஏற்றுக்கொண்டு உயரிய சிகிச்சையை எனக்கு கொடுத்தது. அந்த தருணத்தை என்னால் இன்றளவும் மறக்க இயலாது.
என்னால் மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாடுவது என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்த அளவிற்கு நெருக்கமாக மாறிவிட்டது. இந்த அணிக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் நெருக்கம் ஆகிக்கொண்டே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.