இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் தலைமையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த தருணமே இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் உலககோப்பையையோ இந்திய அணி வென்று 12 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் உலகக்கோப்பையை வென்றுகொடுத்த எம்.எஸ்.தோனி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரருமான ஹசி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.தோனி "ICC தொடரில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொள்வது எளிதான ஒன்று அல்ல. அது கடினமான செயலாகவே இருந்தது. எனினும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை தந்தது. அனைவர்க்குமே இதுதான் சச்சினின் கடைசி உலகக்கோப்பை என்று தெரியும். இதனால் அவருக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்தோம். அவருக்காக கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி.
இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் 20 நிமிடங்களுக்கு முன்னால் மிகவும் எமோஷனல் ஆக இருந்தது. மைதானத்தில் அனைவரும் 'வந்தே மாதரம்' என அனைவரும் பாடியபோது உணர்ச்சிகரமாக இருந்தது. வெற்றி பெற்றபின் மனநிறைவாக இருந்தது. இந்திய அணியின் இந்த வளர்ச்சிக்கு ரசிகர்கள்தான் காரணம் " என்று கூறினார்.