உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.
அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது. கொரோனா காரணமாக கடந்த சில சீசன்களாக சென்னை அணி சொந்த மைதானமாக சேப்பாக்கத்தில் விளையாடாத நிலையில், இந்த முறை சேப்பாக்கத்தில் விளையாடவுள்ளது.
தனது இறுதி போட்டியினை சேப்பாக்கத்தில்தான் விளையாடுவேன் என தோனி கூறியுள்ள நிலையில், இந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டியோடு தோனி ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டுவருகிறது. இந்த நிலையில், தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இது என்று கேள்விப்பட்டேன் ஆனால் அவர் விரும்பினால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாடலாம் என ஆஸ்திரேலிய வீரரும் முன்னாள் சென்னை அணி வீரருமான ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "தோனியின் விளையாட்டைப் போலவே அவரும் சிறந்த மனிதர். அவரது ஃபிட்னெஸ் அவரை ஒரு நல்ல தலைவராக உருவாக்கியிருக்கிறது. மைதானத்தில் அவரது திறமைகள் அபாரமானது. சென்னை அணி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வெற்றிகளை பெற தோனியும் ஒரு முக்கிய காரணம். தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி இது என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவர் விரும்பினால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் கூட விளையாடலாம்" என்று கூறியுள்ளார்.