தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் சொதப்பினாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
அதிலும் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் அவர் பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் தனது இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து சொதப்பிய அவர் பின்னர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சமீபத்தில் நடந்த நாக்பூர் டெஸ்ட்போட்டியின் போதுகூட ரோகித் சர்மா சதமடித்ததும் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அரைசதத்தை சதமாக மாற்றும் வீரர்கள் பட்டியல் கட்டப்பட்டிருந்தது.அதில் 50 சதவீதத்தோடு ரோகித் சர்மா நான்காம் இடம் பெற்றிருந்தார். ஆனால், 60 சதவீதத்தோடு முதல் இடத்தில் தமிழக வீரர் முரளி விஜய் இடம்பெற்றிருந்தார்.
அதைப்பார்த்த கமெண்டரி பாக்ஸில் இருந்த மும்பையை சேர்ந்தவரும் முன்னாள் இந்திய வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சரியம் என கூறியிருந்தது சர்ச்சையானது. இதற்கு முரளி விஜய் சில முன்னாள் மும்பை வீரர்களால் என்றுமே தென்னிந்திய வீரர்களை புகழ்ந்து பேச முடியாது என அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரைப் போல வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் இந்தியாவின் மிகச்சிறந்த தொடக்க வீரர் என இந்திய வீரர் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "என்னைப் பொறுத்த வரை சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரைப் போல வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் இந்தியாவின் மிகச்சிறந்த தொடக்க வீரர். அவரை போன்ற புஜாராவையும் நாம் யாரும் அதிகம் கொண்டாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் மிகவும் கடினமான வேலையை செய்துள்ளனர். அதாவது சவாலான சூழ்நிலைகளில் வெளிநாடுகளில் புதிய பந்தை எதிர் கொண்டார்கள். எனவே அந்த வகையான பார்ட்னர்ஷிப்பிலிருந்து சில விசித்திரங்கள் வெளிப்படுவது ஆச்சரியமானது. அவர்களை நாம் நிச்சயம் கொண்டாடவேண்டும்" என்று கூறியுள்ளார்.