நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இளம்வீரர் சுப்மன் கில் ஒருமுனையில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் தூண் போல நிலைத்து நின்று ஆடினார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சதமடித்து அசத்தினார். மேலும் அந்த தொடரில் 3 போட்டிகளில் 360 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார்.
ஆனால், அதன்பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் 7,11 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கில்லை வெளியே அமரவைத்து ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை சிறப்பாக பயன்படுத்திய கில் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டம் விளையாடினார். அதிலும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய அவர் 54 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர், 63 பந்துகளில் 12 ஃபோர், 7 சிக்ஸர்களுடன் 126 ரன்கள் குவித்து அதகளப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவரின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.