உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
இதன் காரணமாக இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக பணம் கிடைப்பதால் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக ஆடுவதை தவிர்த்து பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அப்படியே நாட்டுக்காக ஆடும் வீரர்கள் கூட டி20 போட்டிகளில் தான் ஆட விரும்புகிறார்களே தவிர டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க விரும்புவதில்லை.
இந்த நிலையில், இந்த சம்பவங்களை குறிப்பிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கவலையளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அடுத்த 5-10 வருடங்களில் கிரிக்கெட் எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் கவலை ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கும் வீரர்களை எண்ணி மகிழ்கிறேன். அந்தப் பெருமிதம் தான் உங்கள் வாழ்க்கையின் முக்கியமானதாக இருக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட் உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக் கூடியது. என்னுடன் ஆடும் வீரர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவே ஆர்வமாக உள்ளனர். உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் தான் பலருக்கும் ஆர்வம் உள்ளது. ஆனால் உங்கள் மதிப்பை அறிய வேண்டுமென்றால் உங்களுக்கென்று நற்பெயரை எடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.