உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். ஐ.பி.எல் தொடரில் பணம் கொழிப்பதால் அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால் இதில் பங்கேற்க சர்வதேச வீரர்கள் அதிகம் காட்டி வருகின்றனர். ஏலத்தில் தங்களை யாரும் எடுக்கமாட்டார்களா என பல்வேறு நாடுகளின் நட்சத்திர வீரர்களும் ஆவலோடு காத்து இருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐ.பி.எல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவால் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டம் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் 28ஆம் தேதி ஐபிஎல் தொடர் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ள நிலையில், அந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் பிளே ஆப் சுற்றின் போது இங்கிலாந்து திரும்பும் படி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் பிசிசிஐ-யிடம் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்தும் அல்லது ஐபிஎல் தொடரை முன்கூட்டியே முடிக்க முடியுமா என்பது குறித்தும் பிசிசிஐ யோசித்து வருகிறார். அதேநேரம் ஐபிஎல் தொடரை விட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முக்கியம் என சில பிசிசிஐ அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.