16 ஆவது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் கேரளாவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஏலம் நடந்து முடிந்தது. இதையடுத்து ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்திய வீரர்கள் சிலர் தொடர் போட்டிகளில் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் ஐ.பி.எல் போட்டி நடக்கும் போது எனது அருகே அமர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள ரிக்கி பாண்டிங், "ரிஷப் பண்ட் எங்கள் அணிக்குத் தேவை. ஒரு கேப்டனாக அணி வீரர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அவர் எங்களுக்குத் தேவை. அவர் விளையாடுவதற்கான உடல்தகுதி இல்லை என்றாலும் மைதானத்திற்கு வந்து போட்டிகளை காணும் அளவிற்குத் தயாராகிவிட்டால் போதும். ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது எனது அருகில் அமர்ந்து ரிஷப் பண்ட் போட்டிகளைக் காணவேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் சாலை விபத்தில் சிக்கி மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதால் ஆறு மாதங்களுக்குக் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.