ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
குறிப்பாக பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பெண்கள் வெளியே வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்திருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெண்களுக்கு எதிராக செயல்படும் தாலிபான் அரசை கண்டித்து இந்த தொடரை புறக்கணிக்கப்போவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் விளையாடுவது குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறுவதாக அறிவித்ததைக் கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உலக கிரிக்கெட் அரங்கில் நாங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்து வரும் இந்த நேரத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு எங்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தால், பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி யாருக்கும் சங்கடம் கொடுக்க நான் விரும்பவில்லை. எனவே, இப்போட்டியில் எனது எதிர்காலம் குறித்து தீவிரமாக பரிசீலிப்பேன். கிரிக்கெட் விளையாட்டுதான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கை. ஆதலால் இதில் அரசியல் வேண்டாம்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷித் கானின் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நாங்கள் சாதாரணமாக இந்த முடிவை எடுக்கவில்லை. எங்கள் அரசு உள்பட பலரிடமும் ஆலோசனை செய்த பிறகே இம்முடிவை எடுத்தோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை விளையாடுவதில் நம்பிக்கையுடன் உள்ளோம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.
ஆனால் கடந்த நவம்பர், டிசம்பரில் தலிபான் அரசு பிறப்பித்த உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகினோம். அடிப்படை மனித உரிமை என்பது அரசியல் அல்ல" என்று கூறியுள்ளார்.