கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும். இதே நிலை தொடர்ந்தால் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்கு இடையே ஆசிய கோப்பை தொடர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா வெளியிட்டார். இதன்படி ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த ஆசிய கோப்பை தொடர் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் ஒருதலைபட்சமாக உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜம் சேதி "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கியுள்ளனர். இதற்காக ஜெய்ஷாவுக்கு நன்றி. இந்தாண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான்தான் நடத்துகிறது. ஆனால் ஒருதலைபட்சமாக செயல்பட்ட ஜெய்ஷா, வேண்டுமென்றால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அட்டவணையையும் முடிவு செய்துவிடுவது தானே" என விமர்சித்துள்ளார்.