இந்திய அணி வங்கதேசத்திற்கு சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியை விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தாலும் டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றது.
டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜ் இடம் பெற்றிருந்தார். தொடர் முடிந்ததை அடுத்து அவர் வங்கதேசத்தில் உள்ள டாக்கா விமான நிலையத்தில் இருந்து ஏர் விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் இந்தியா வந்தடைந்துள்ளார்.
அப்போது முகமது சிராஜ் தனது பேக்கை தவறவிட்டுள்ளார். இதையடுத்து அவர் தனது பேக் விமானத்தில் தவறவிட்டு வந்துவிட்டதாக ஏர் விஸ்தரா விமானத்தின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து புகார் தெரிவித்திருந்தார்.
இதைப்பார்த்த ஏர் விஸ்தரா நிறுவனம், நீங்கள் தவறவிட்ட பேக்கை பாதுகாப்பாகத் திருப்பி தருவதாக உறுதியளித்து அவருக்கு டிவிட்டரிலேயே பதில் அளித்திருந்தது. ஆனால் அவரது பேக் கிடைக்கவில்லை.
இதையடுத்து முகமது சிராஜ் மீண்டும் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 26ம் தேதி டாக்காவில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது என்னிடம் 3 பைகள் இருந்தது. அதில் ஒன்றை தவறவிட்டு விட்டேன். தவறவிட்ட பேக் எந்த நேரத்திலும் கண்டுபிடித்துக் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை" என தெரிவித்திருந்தார்.
இந்த ட்வீட்டை அடுத்து, 'தவறவிட்ட உங்கள் பேக்கை கண்டுபிடிக்க தங்கள் ஊழியர்கள் தொடர்ந்து முயற்சிசெய்து வருகிறார்கள்' என விஸ்தாரா நிறுவனம் மீண்டும் முகமது சிராஜ்க்கு பதில் அளித்துள்ளது. தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரரை அலைக்கழித்து வரும் Air Vistara நிறுவனத்திற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.