டெஸ்ட் கிரிக்கெட்டின் உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதையடுத்து, 99புள்ளிகளுடன் இந்தியா பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தென்னாப்ரிக்கா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் 3,4,5வது இடத்தில் உள்ளன. நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தற்போது சொந்த மண்ணில் தென்னாப்ரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக, இந்தியாவுடன் பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது.
தென்னாப்ரிக்கா, இந்தியா உடனான டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, இறுதிப்போட்டி வாய்ப்பையும் உறுதி செய்யும்.
இந்திய அணியை பொறுத்தவரை, வங்கதேச டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி, 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக, சொந்த மண்ணில் பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றும் பட்சத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பு உறுதியாகும்.
அதேசமயம், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தென்னாப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து - இலங்கை அணிகள் தலா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஒருவேளை ஆஸ்திரேலியாவுடனான தொடரில் இந்திய அணி தோற்று, வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் தென்னாப்ரிக்கா வென்றால், இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு கேள்விக்குறியாகும்.
அதேசமயம், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ் தொடர் டிராவில் முடிந்தால், தென்னாப்ரிக்க அணியின், டெஸ்ட் தொடர்கள் முடிவை பொறுத்து பட்டியல் மாறுபடும்.
ஆகையால் சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வலுவான வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் 3-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா வென்றால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பை எட்ட முடியும். அறிமுக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த இந்தியா நியூசிலாந்து அணியுடன் தோற்று இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் இந்திய அணி தீவிரம் காட்டவுள்ளது.