22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் நேற்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
ஆனால், அதன்ர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றி பெற்றது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்தில் 26 ஆட்டங்களில் பங்கேற்று அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனைக்கு மெஸ்ஸி சொந்தக்காராகியுள்ளார். மேலும், உலகக் கோப்பை கால்பந்தில் மெஸ்ஸி 19 ஆட்டங்களில் கேப்டனாக அணியை வழிநடித்தி அதிக போட்டிகளில் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதோடு இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையில் மெஸ்ஸி 2,314 நிமிடங்கள் களத்தில் விளையாடி இத்தாலியின் பாவ்லோ மால்டினியின் (2,217 நிமிடங்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.இதுவரை 5 உலகக்கோப்பையில் விளையாடியுள்ள மெஸ்ஸி அனைத்து தொடர்களிலும் சக வீரர் கோல் அடிக்க அசிஸ்ட் செய்து எந்த வீரரும் படைக்காத பெரும் சாதனையை படைத்துள்ளார்.
மேலும், உலகக்கோப்பையில் ரவுண்டு ஆஃப் 16 போட்டி, காலிறுதி போட்டி, அரையிறுதி போட்டி, இறுதிப்போட்டி என நாக் அவுட் போட்டிகளில் அனைத்திலும் கோல் அடித்து இந்த சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை தொடரின் நாயகனுக்கு வழங்கப்படும் 'தங்க கால்பந்து' விருதை பெற்று உலகசாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச தொடர்களில் அதிக கோல் அடித்த (26 கோல் ) தென் அமெரிக்க கால்பந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.