கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.
அதேபோல மற்றொரு போட்டியில் குரோஷியா அணி பலம்வாய்ந்த பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மொரோக்கோ அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மொரோக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
பலம்வாய்ந்த ரொனால்டோவின் போர்ச்சுகல் இந்த போட்டியில் எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது ரொனால்டோ ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த போட்டியில் நடுவராக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஃபகுண்டோ டெல்லோ என்பவர் களம்கண்டார்.
இந்த நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் தங்கள் தோல்விக்கு அர்ஜென்டினா நடுவரே காரணம் என போர்ச்சுகல் தடுப்பாட்டக்காரர் பெப்பே கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அர்ஜென்டினா நடுவர் எங்கள் ஆட்டத்தை கணித்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.
மேலும் போர்ச்சுகல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் கூறும்போது " அவர் பெனால்டியை கொடுக்கவில்லை. இந்த உலகக் கோப்பையை வெல்லும் திறன் எங்களிடம் இருந்தது.இதற்கு பின்னர் அர்ஜென்டினா சாம்பியன் ஆகும். ஐந்து அர்ஜென்டினா நடுவர்கள் இருந்தார்கள். இது குறித்து வேறு என்ன சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார்.