இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கே.எல்.ராகுல் மட்டுமே போராடி 73 ரன்கள் குவித்தார். முடிவில் இந்திய அணி 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் ஆடிய வங்கதேச அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தோல்வியின் இறுதி நிலையில் இருந்தது. எனினும் கடைசியில் அதிரடியாக ஆடிய மெஹதி ஹாசன் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்த போட்டியின்போது கடைசி விக்கெட் வீழ்த்தினால் இந்திய அணி வெற்றியென்ற நிலையில் இருக்கும்போது ஆட்டத்தின் 43 வது ஓவரில் மெஹதி ஹாசன் சிக்ஸர் அடிக்க முயன்றநிலையில் பந்து டாப் எட்ஜ்ஜாகி உயரத்தில் சென்றது. அந்த பந்தை பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் முயன்றநிலையில் அதனை அவர் தவறவிட்டார். இதனால் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிப்போனது.
அதுதவிர அதேபோல இறுதிக்கட்டத்தில் மேலெம்பி சென்ற பந்தை தெர்ட்மேன் திசையில் நின்றுகொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் தவறவிடுவார். உண்மையில் அவர் பந்து வந்ததையே கவனிக்காமல் அதன் அருகில் கூட வந்திருக்கமாட்டார். இதனைக் கண்டு கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபமடைந்தது லைவில் வெளியானது.
இந்த நிலையில்,இந்திய அணி தவறவிட்ட கேட்ச்கள் குறித்து இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "ஆட்டத்தின்போது கேட்ச் பிடிக்க தவறுவது இயல்பான விசயம்தான். கே.எல்,ராகுல் கேட்ச்சை தவறவிட்டதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் வாஷிங்டன் சுந்தர் எதற்காக அந்த பந்தை பிடிப்பதற்கு முயற்சி கூட செய்யவில்லை என்ற எனக்கு புரியவில்லை. இதற்கான பதில் வாசிங்டன் சுந்தரிடம் மட்டும் தான் இருக்கும். ஒருவேளை போதிய வெளிச்சமின்மை காரணமாக அவர் அந்த பந்தை கவனிக்காமல் விட்டிருந்திருக்கலாம்." என கூறியுள்ளார்.