உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இந்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன் முன்னராக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியல் தொடர்பான விவரங்களை தரவேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகி குழுவுக்கு அனுப்பியிருந்தன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்கவைத்து பிராவோ உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்தது. மேலும், சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனியே தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. இது தவிர பல்வேறு அணிகள் சார்பில் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்த வீரர்களை வைத்து மினி ஏலம் நடைபெறும். அந்த வகையில், டாடா ஐபிஎல் 2023: வீரர்களின் ஏலம் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.