தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ம் ஆண்டு தனது 19-வது வயதில் இந்திய அணிக்கு தேர்வானார். அதைத் தொடர்ந்து இந்திய அணியில் அவ்வப்போது இடம்பெற்றுவந்த அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறனை நிரூபித்து வந்துள்ளார்.
அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாகூரோடு இணைந்து இக்கட்டான தருணத்தில் அவர் அடித்த அரைசதம் அந்த தொடரையே இந்திய அணியின் பக்கமாக திரும்பியது. அதன் பின்னர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அவர் அடித்த 85 ரன்களும் தொடர்ந்து அகமதாபாத்தில் அவர் அடித்த 96 ரன்களும் அவரை அணியில் அசைக்க முடியாத வீரராக மாற்றியது.
ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்கள் அணியில் அவரின் இடத்தையே கேள்விக்குறியாக்கியது. அணியில் அவர் இடம்பெறுவதும் பின்னர் காயம் காரணமாக வெளியேறுவதுமாகவே அவரின் கடந்த 2 ஆண்டு கிரிக்கெட் பயணம் இருந்து வந்தது.
இறுதியாக தற்போது அவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். முதலாவது ஒரு நாள் போட்டியில் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும் இறுதிக்கட்டத்தில் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்த் கவனிக்கத்தக்க வீரராக வாஷிங்டன் சுந்தர் மாறினார்.
அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 121-5 என்ற நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இறுதிவரை களத்தில் இருந்த அவர் இந்திய அணி 200 ரன்களை கடக்க உதவி தனது முதல் ஒருநாள் போட்டிகளுக்கான அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த போட்டியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பைக்கு வாஷிங்டன் சுந்தரை கவனத்தில் கொள்ளுங்கள் என்று பிசிசிஐக்கு முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கேள்விகளுக்கு இடமின்றி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் வாஷிங்டன் சுந்தர் பிரகாசமாக செயல்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்குள் வந்து இப்படி விளையாடியது அவரின் மனநிலை மற்றும் பயிற்சியை காட்டுகிறது. நாளுக்கு நாள் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்.
மற்ற வீரர்கள் சொதப்பிய போதும் பதற்றமின்றி அவர் தொடர்ந்து அணிக்கு தேவையானதை கொடுத்தார். கடந்த காலங்களில் யுவராஜ் மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் செய்ததை போல வாஷிங்டன் சுந்தர் செயல்படுகிறார். இப்போதைய அணியில் பேட்ஸ்மேன்கள் யாருமே பந்து வீசுவதில்லை. அதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமல் போனால் அணிக்கு முக்கியமான வீரராக இவர் இருப்பார். இதனால் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை அணியில் வாஷிங்டன் சுந்தரை பிசிசிஐ கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.