உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் தொடருக்கு பின்னர் மிகப்பெரிய தொடர் என்பதால் உலகமக்களின் கண்கள் கத்தாரில் குவிந்துள்ளது.
இந்தியாவில் வடகிழக்கு, மேற்குவங்கம்,கோவா, கேரளா,வடசென்னை என சில இடங்களில் இந்திய கால்பந்து உயிரோட்டமாக இருந்தாலும் பிறஇடங்களில் அதற்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதோடு 80களில் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் எழுச்சிக்கு பின்னர் கால்பந்து பல இடங்களில் மறக்கப்பட்டே போனது.
ஆனாலும், கால்பந்து உயிரோட்டமாக இருக்கும் இடமாக கேரளா இருந்து வருகிறது. சில நேரங்களில் கேரளாவில் கிரிக்கெட் பிரபலமா அல்லது கால்பந்து பிரபலமா என்ற கேள்வி எழும் அளவு அங்கு கால்பந்துக்கு வெறித்தனமாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளத்தை சேர்ந்த நாஜி நெளஷி என்ற பெண் ஒருவர் தனது 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பைத் தொடரை நேரில் காணஇந்தியாவில் இருந்து கத்தாருக்கு மஹிந்திரா தார் வாகனத்தில் சென்றுள்ளார்.
இதற்காக தனது காரை மாற்றியமைத்துள்ள அவர், சமையலுக்கு தேவையான அரிசி, தண்ணீர், பருப்பு போன்ற பொருள்களையும் தன்னோடு எடுத்துச்சென்றுள்ளார். காரில் கேரளாவில் இருந்து மும்பை சென்றவர் அங்கிருந்து காரை கப்பல் மூலம் ஓமனுக்கு கொண்டு சென்று அங்கிருந்து தரை வழியில் கத்தார் சென்றுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் " அர்ஜென்டின வீரர் மெஸ்ஸிதான் என் ஹீரோ. என் ஹீரோவை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மட்டுமே இவ்வளவு தூரம் பயணித்து வந்துள்ளேன்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த பயணம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.