உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜென்டினா போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் நிச்சயம் அர்ஜென்டினா வெற்றி பெறும் என உலகமே எதிர்பார்த்திருந்த வேலையில் ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது சவூதி அரேபியா அணி. போட்டி தொடங்கிய 7வது நிமிடத்திலேயே மெஸ்ஸி கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் தனது கணக்கைத் தொடங்கி வைத்தார்.
அடுத்தடுத்து அர்ஜென்டினா கோல் அடித்து வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் சவூதி அரேபியா அணி 2 கோல்கள் அடுத்து முன்னிலை பெற்றது. பிறகு கடுமையாகப் போராடியும் அர்ஜெட்டினா வீரர்களால் கோல் அடிக்கவே முடியவில்லை. இதன்பிறகு போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது.
இந்த தோல்வியை அடுத்து அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரர் ராய் கின், நட்சத்திர வீரராக இருந்தால் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுவிட முடியாது என விமர்சித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய ராய் கின், "உலகக் கோப்பையை வெல்ல மெஸ்ஸி கவனமாக இருக்க வேண்டும். ஒரு வீரரால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியாது. அர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பை வெல்வதற்கு மெஸ்ஸி ஒரு வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும்" என தெரிவித்துள்ளார். 4 முறை உலக கோப்பை போட்டியில் விளையாடி உள்ள மெஸ்ஸி ஒரு முறை கூட தனது நாட்டிற்காக கோப்பையை பெற்று தந்தது இல்லை என்ற குற்றச்சாட்டை இந்த உலகக் கோப்பையில் தவிடுபொடியாக்குவாரா என்பது அடுத்த போட்டியில்தான் நமக்கு தெரியவரும்.