உலகக்கோப்பை டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் இந்திய அணி தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அதில் இந்தியா சார்பில் அபாரமான ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து அசத்தினார்.பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணி அபாரமாக ஆடியது.
15.5 ஆவது ஓவரில் நியூசிலாந்து அணி 130 ரன்கள் எடுத்திருந்தபோது சிறப்பாக ஆடிவந்த கிலென் பிலிப்ஸ், 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே குவித்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2.5 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியடைந்து. எனினும் கேப்டன் பாண்டியா நிதானமாக ஆட 9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் ஆட்டத்தை தொடரான நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக டக்வோர்த் லீவிஸ் (DLS) விதிமுறையின் படி இரு அணிகளும் சமமான ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் தொடரில் முன்னிலையில் இருந்த இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் எப்போதுவேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையே இருந்தது. இதனால் டக்வோர்த் லீவிஸ் (DLS) விதிமுறை படி இரு அணிகளும் கணக்கீடுகளை கையில் வைத்துக்கொண்டே போட்டியில் ஆடின. அப்படி இருந்த நிலையில், இந்திய அணி 1 ரன்கள் அதிகம் எடுத்திருந்தாலே இந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கலாம் என்ற நிலையில், ஆட்டம் சமனில் முடிந்ததற்கு இந்திய அணி சரியாக கணக்கீடு செய்யாததே என ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.