கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஈக்வடார் அணி போட்டியை நடத்தும் நாடான கத்தாரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானையும் நெதர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஆப்ரிக்க சாம்பியன் செனக்கல் அணியையும் வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணி வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க வீரர் திமோத்தி வேயா ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். ஆனால் இரண்டாம் பாதியில் பெனால்டி மூலம் கிடைத்த வாய்ப்பில் வேல்ஸ் வீரர் பாலே கோல் அடித்து ஆட்டத்தை சமனாக்கினார். பின்னர் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கான கோல் அடித்த திமோத்தி வேயாவின் தந்தை ஜார்ஜ் வேயா தற்போது ஆப்ரிக்க நாடான லைபீரியாவில் அதிபராக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் கால்பந்து வீரரான ஜார்ஜ் வேயா உலகளவில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் 'பாலன் டி ஓர்' விருதை வென்ற முதல் ஆப்ரிக்கராக திகழ்ந்துள்ளார். மேலும், PSG, AC MILAN,Manchester city ஆகிய முன்னணி கால்பந்து கிளப்புகளுக்காகவும் ஆடியுள்ளார்.
கால்பந்து தொடரில் இருந்து ஓய்வு பெற்றவர் அரசியலில் ஈடுபட்டு லைபீரியாவின் அதிபராக 2018-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவருக்கும் ஜமைக்கா பெண்ணுக்கும் அமெரிக்காவில் பிறந்த திமோத்தி வேயா அந்நாட்டின் குடியுரிமையை பெற்று அந்நாட்டுக்காக தற்போது கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார்.