கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி என்ற பேட்டரில் ஈரானில் நிலவிவந்த முகமது ரிசா ஷா ஆட்சியை அகற்றி ருஹல்லா அலி கொமேனி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. அதன் பின்னர் மதவாத அடக்குமுறைகள் அதிகரித்தன.
பெண்கள் முக்காடு அணியவேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமீபத்தில் பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு அரசால் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் தீவிரமான கண்காணிக்கப்பட்டனர். இந்த சிறப்பு பிரிவு படையினரால் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார்.
சிறையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக பெண்கள் கொதித்தெழுந்தனர். முக்கிய நகரங்களில் பெண்கள் வெளிப்படையாகவே ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடிகளை அறுத்து எறிந்தனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அரச படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொடூரமாக தாக்கும் ஈரான் அரசுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அங்கு அரச அடக்குமுறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாடு தழுவிய அளவில் அங்கு போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
இந்த நிலையில், கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் போராட்டத்துக்கு ஆதரவாக ஈரான் அணி வீரர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து உலககோப்பைக்கு ஈரான் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று அந்த அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
போட்டி தொடங்கும் முன்னர் இரு நாடுகளின் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது தங்கள் நாட்டில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாடாமல் ஈரான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.