இந்திய கிரிக்கெட்டின் முகமாக கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி மாறியுள்ளார். பல ஆண்டுகளாக சச்சின் எப்படி இந்திய அணியில் இருந்தாரோ அதேபோன்ற ஒரு வீரராக விராட் கோலி தற்போது திகழ்ந்து வருகிறார். சச்சினுக்கு வந்த அதே சறுக்கல் போலவே சில மாதங்களுக்கு முன்னர் விராட் கோலியின் நிலையும் இருந்தது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்காத நிலையில், அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை தொடருக்கு விராட் கோலியை அணியில் எடுக்கவே கூடாது என்ற ரீதியிலும் சிலர் தொடர்ந்து கூறிவந்தனர். அப்படி கூறியவர்களுக்கு தற்போது விராட் கோலி பதிலடி கொடுத்து வருகிறார்.
கடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்த நிலையில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த தொடரில் மீண்ட தனது பார்மை இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்த நிலையில், இறுதி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடிய கோலி அந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடிய விராட் கோலி அந்த போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.இதுதவிர இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். இதன் காரணமாக இந்த தொடரில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், நாளை இந்திய அணி இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ள நிலையில், அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஹர்சல் பட்டேல் வீசிய பந்தை கோலி எதிர்கொண்ட நிலையில் எதிர்பாராத விதமாக அந்த கோலியின் இடுப்பில் தாக்கியது. இதன் காரணமாக வலியால் துடித்த விராட் கோலி மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
அதன்பின்னர் சிறிது நேரம் மைதானத்திலேயே அப்படியே அமர்ந்து இருந்த அவர் பின்னர் மீண்டும் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், விராட் கோலி வலியால் துடித்ததை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரசிகர்கள் சிலர் இதன் காரணமாக ஹர்சல் பட்டேலை விமர்சித்து வருகின்றனர்.
எனினும் போட்டியில் விளையாட முடியாத அளவு பெரிய காயமாக இது இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், நாளைய போட்டியில் நான் ஆடுவேன் என ரோஹித் சர்மா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.