சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். நெதர்லாந்து அணியுடனான போட்டியில் சூரியகுமாரின் அதிரடி ஆட்டமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.
அதன்பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பவுலிங்கிற்கு சாதகமான பெர்த் மைதானத்தில் மற்ற இந்திய அணி வீரர்கள் திணறிய போதும், சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 40 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினர். அவரின் இந்த ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் "என்னைப்பொறுத்தவரையில் சிறந்த மிடில் ஆர்டர் டி20 பேட்ஸ்மேன் என்றால் அது சூர்யகுமார்தான் . அவர் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை நான் பார்த்ததே இல்லை. இக்கட்டான சூழலில், கடினமான பிட்ச்-ல் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒருவர் விளையாடுவது சாதாரணம் அல்ல.அவரின் வெற்றிக்கு காரணம், ஒரே மாதிரியான ஆட்டம் தான்.
எப்படிபட்ட சூழல் வந்தாலும், அதை குறித்து கவலை படாமல் அதே அதிரடியுடன் ஆடுகிறார். களத்தின் தன்மை, பவுலர்களின் மனநிலை ஆகியவையை நன்கு அறிந்துவைத்துள்ளார். பவுலர்கள் அடுத்து எந்த பந்து போடப்போகிறார்கள்? என்பதை ஏ.பி.டிவில்லியர்ஸ் நன்கு அறிந்து வைத்து ஆடுவார். அதே போன்று தற்போது சூர்யகுமார் ஆடுகிறார்" எனக் கூறியுள்ளார்.