ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி அக்டோபர் 6ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டுவிட்டது. வேகப்பந்துவீச்சு ஆயுதம் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்குப் பெரும் இழப்பாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான சர்வதேச டி20 தொடர்களிலும் எந்த வேகப்பந்துவீச்சாளரும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்படவில்லை. இருந்தாலும் இந்திய அணியில் பும்ராவுக்குப் பதில் கலந்துகொள்ளப் போகும் வீரரின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ,யுஸ்வேந்திர சஹால் போன்ற முக்கியமான பௌலர்கள் சிலர் அடுத்தடுத்து காயம் அடைந்தது, சிலர் ஃபார்மை இழந்தது என அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்திய அணியின் இந்த பௌலிங் பிரச்சனைக்குக் காரணமாக அமைந்துவிட்டது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அணித் தேர்வை இப்போது பல முன்னணி வீரர்களும் விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றனர். ஒரு சில வீரர்களை இந்திய அணி எடுக்காததும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது.
ஒரு இந்திய நாளிதழுக்குக் கொடுத்த பேட்டியில், இந்திய உலகக் கோப்பை அணியில் உம்ரன் மாலிக்கை எடுக்காதது பற்றி விமர்சித்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ. தொடர்ந்து 140+ kmph வேகத்தில் பந்துவீசக்கூடியவரான உம்ரன் மாலிக், இந்திய அணிக்காக 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
"ஆஸ்திரேலியாவில் உம்ரன் மாலிக்கை இந்திய அணி களமிறக்குவதை நான் விரும்பியிருப்பேன். ஆம், அவர் ஒரு சர்ப்ரைஸாக இருந்திருப்பார். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக அவர் இருந்திருப்பார். அவர் விளையாடவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலிய அணியிலும் கேமரூன் கிரீன் இருக்கவெண்டும். இந்த உலகக் கோப்பை அணியில் கிரீன் இல்லை என்பதை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று லெஜண்ட்ஸ் லீக் போட்டி சமயத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரெட் லீ.
"ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகம், பௌன்ஸ் இரண்டும் மிகவும் முக்கியமானது. அங்கு நீங்கள் டெத் ஓவர்களில் பந்துவீசும்போது, லென்த்தில் பந்தை பிட்ச் செய்தால் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவார்கள். அதனால் பவர்பிளே ஓவர்களில் அதீத வேகம் எந்த அணிக்கும் நல்லது; டெத் ஓவர்களிலும் அது மிகவும் நல்லது. அதேசமயம் உங்கள் பந்துகளை எவ்வளவு சிறப்பாக உங்கள் திட்டத்துக்கு ஏற்ப செயல்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்" என்றும் கூறியிருக்கிறார் பிரெட் லீ.
வரும் அக்டோபர் 6ம் தேதி தொடங்கும் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்ளும்.