விளையாட்டு

விமானத்தை தவறவிட்டதால் நட்சத்திர வீரர் உலகக் கோப்பையிலிருந்து நீக்கம் - கிரிக்கெட் வாரியம் அதிரடி !

விமானத்தை தவறவிட்டதால் டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அனியில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிம்ரன் ஹிட்மெயர் நீக்கப்பட்டுள்ளார்.

விமானத்தை தவறவிட்டதால் நட்சத்திர வீரர் உலகக் கோப்பையிலிருந்து நீக்கம் - கிரிக்கெட் வாரியம் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அனியில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிம்ரன் ஹிட்மெயர் நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்புவதற்கான விமானத்தை ஹிட்மெயர் தவறவிட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) அமைப்பு உறுதி செய்திருக்கிறது. ஏற்கெனவே அவருக்கான விமானம் மாற்றப்பட்டிருந்த நிலையில் அதையும் ஹிட்மெயர் தவறவிட்டிருக்கிறார். சில குடும்ப காரணங்களுக்காக ஹிட்மெயரின் விமானம் சனிக்கிழமைக்கு (அக்டோபர் 1) மாற்றப்பட்டிருக்கிறது. அதைத் தவறவிட்டதால் அவரை நீக்கியிருப்பதாக திங்கள் கிழமை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கம்.

விமான இருக்கைகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ஹிட்மெயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை அவர் கயானாவில் இருந்து புறப்படுவதாக இருந்தது. ஆனால் தன்னால் அந்த விமானத்தையும் பிடிக்க முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாகிக்கு தெரிவித்திருக்கிறார் ஹிட்மெயர். அதனால் 2022 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அவரை நீக்கும் முடிவை எடுத்திருக்கிறது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்.

விமானத்தை தவறவிட்டதால் நட்சத்திர வீரர் உலகக் கோப்பையிலிருந்து நீக்கம் - கிரிக்கெட் வாரியம் அதிரடி !

ஹிட்மெயருக்குப் பதிலாக ஷமார் புரூக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தலைமை நிர்வாகி ஜிம்மி ஆடம்ஸ் தெரிவித்திருக்கிறார். "வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பை அணியில் ஷிம்ரன் ஹிட்மெயருக்குப் பதிலாக ஷமார் புரூக்ஸ் தேர்வுக் குழு தேர்வு செய்திருக்கிறது. அந்த முடிவு, இன்று மதியம் நடந்த கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகிகள் குழு சந்திப்பில் தெரியப்படுத்தப்பட்டது" என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ஆடம்ஸ்.

2022ம் ஆண்டு நடந்த 15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.5 கோடி ரூபாய் கொடுத்து ஹிட்மெயரை வாங்கியது. "ஷிம்ரன் ஹிட்மெயர் கேட்டுக்கொண்டதற்காக அவரது குடும்ப காரணங்களுக்காக சனிக்கிழமை கிளம்ப வேண்டிய அவருக்கு, திங்கள் கிழமை வேறொரு விமானத்தில் இருக்கை உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு மேலும் அவருடைய ஆஸ்திரேலிய பயணம் தள்ளிப் போனால், அவருக்குப் பதில் மாற்று வீரரை தேர்வு செய்யவேண்டிய சூழ்நிலை வரும் என்பதும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை போன்ற ஒரு மிகப் பெரிய தொடரில் அணியில் செயல்பாட்டில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பவில்லை" என்று குறுப்பிட்டிருக்கிறார் ஆடம்ஸ்.

விமானத்தை தவறவிட்டதால் நட்சத்திர வீரர் உலகக் கோப்பையிலிருந்து நீக்கம் - கிரிக்கெட் வாரியம் அதிரடி !

இந்த வார இறுதியில் புரூக்ஸ் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவார். உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. அந்தப் போட்டிகளில் புரூக்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பை அணியோடு மெல்போர்னில் நேரடியாக புரூக்ஸ் இணைந்து கொள்வார். சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் பிளே ஆஃப் போட்டியில் புரூக்ஸ், ஹிட்மெயர் இருவரும் விளையாடினர். குவாலிஃபயர் 2 போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய புரூக்ஸ், ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் விளாசி தன்னுடைய ஜமைக்கா தலாவாஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார்.

banner

Related Stories

Related Stories