ஜக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் குரூப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.
ஆனால் சிறிய தவறால் ரோகித், விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.
பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் இலக்கை கடந்து திரில் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியின் 18-வது ஒவேரில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஆசிப் அலியின் கேட்சை இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தவறவிடுவார். இதனால் ஆத்திரத்தில் ரோகித் சர்மா மைதானத்திலேயே கத்தினார். இறுதியில் ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாச பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில், பலரும் தோல்விக்கு காரணம் அர்ஷ்தீப் சிங்தான் என விமர்சித்து வருகின்றனர். எனினும் அவருக்கு ஆறுதலாகவும் பலர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சிலர் அர்ஷ்தீப் சிங்கை குறிவைத்து காலிஸ்தானி என்றெல்லாம் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக அர்ஷ்தீப் சிங்குக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள். யாரும் வேண்டுமென்றே கேட்சை தவறவிட மாட்டார்கள். பாகிஸ்தான் நன்றாக விளையாடியது. நமது அணியினரையே கேவலமான விசயங்களை சொல்லி இந்த தளத்தில் இழிவுபடுத்துபவர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. அர்ஷ் ஒரு தங்கம்." என்று கூறியுள்ளார்.