கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு விளையாடியிருக்கவேண்டியது. நியூசிலாந்து கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவரின் முடிவால் அது நடக்காமல் போய்விட்டது. அவர் மட்டும் நியூசிலாந்து அணிக்கு விளையாடியிருந்தால் அந்த அணி ஒரு உலகக் கோப்பை தொடரை வென்றிருக்கும். அந்த இறுதிப் போட்டியில் நடந்த பல்வேறு டிராமாக்கள் நடக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அப்படி நடந்திருந்தால் அதில் ராஸ் டெய்லரின் பங்கு இருந்திருக்கும். ஆனால் துருதிருஷ்டவசமாக அது நடக்காமல் போய்விட்டது.
ராஸ் டெய்லர் எழுதிய சுயசரிதை புத்தகமான 'ராஸ் டெய்லர்: பிளாக் & வைட்' சமீபத்தில் வெளியானது. அதில் பென் ஸ்டோக்ஸ் பற்றிய சுவாரஸ்யமான ஒரு பகுதி இடம்பெற்றிருக்கிறது. 2010ம் ஆண்டு ராஸ் டெய்லர், பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து டர்ஹாம் அணிக்கு விளையாடினர். நியூசிலாந்தில் பிறந்தவரான பென் ஸ்டோக்ஸ் அப்போது இங்கிலாந்தில் தான் உள்ளூர் கிரிக்கெட் விளையாடிவந்தார். அவரிடம் நியூசிலாந்து அணிக்கு ஆட விருப்பமா என்று கேட்டிருக்கிறார். ஸ்டோக்ஸ் சற்று ஆர்வம் காட்டவே அப்போது நியூசிலாந்து கிரிக்கெட் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜஸ்டின் வாகனிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறார் ராஸ் டெய்லர்.
"ஸ்டோக்ஸுக்கு அப்போது 18 அல்லது 19 வயது இருந்திருக்கும். ஒரு நியூசிலாந்துக்காருக்கான குணங்கள் அவரிடம் இருக்கவே செய்தது. ஒருநாள் நாங்கள் இருவரும் அமர்ந்து மது அருந்துகையில் நியூசிலாந்து அணிக்கு ஆட விருப்பமா என்று கேட்டேன். அவர் விருப்பம் தெரிவிக்கவே நியூசிலாந்து தலைமை செயல் அதிகாரி ஜஸ்டின் வாகனுக்கு மெசேஜ் அனுப்பினேன். ஸ்டோக்ஸ் என்றொரு இளம் கிரிக்கெட் வீரர் இருக்கிறார். அற்புதமான கிரிக்கெட் விளையாடும் அவர், நியூசிலாந்து அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்று அந்த மெசேஜில் தெரிவித்தேன்.
அதற்கு வாகனோ, 'அவர் நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடட்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்று பதில் கூறினார். ஆனால் நான் சற்று வாதாடினேன். 'நாம் அவருக்கு சில சலுகைகள் தரவேண்டும். ஏனெனில், இங்கு வந்து மீண்டும் அடிமட்டத்தில் இருந்து தொடங்கச் சொன்னால் அவர் நிச்சயம் விருப்பம் தெரிவிக்கமாட்டார்' என்று வாகனிடம் கூறினேன். கடைசியில் அது எதுவுமே நடக்கவில்லை" என்று எழுதியிருக்கிறார் ராஸ் டெய்லர்.
"நியூசிலாந்து அணிக்கு ஆடுவதற்கு உண்மையாகவே ஸ்டோக்ஸ் மிகவும் ஆர்வமாக இருந்தார். நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து அவருக்கு சில உறுதிகள் கொடுத்திருக்கவேண்டும். ஆனால், அதைச் செய்ய வாகன் தயாராக இல்லை" என்றும் எழுதியிருக்கிறார் ராஸ் டெய்லர்.
ஆனால் அதேசமயம் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது என உறுதியாகிவிட்டார் பென் ஸ்டோக்ஸ். அவருக்கு 17 வயதாக இருக்கும்போது ஒரு வலைதளத்துக்குக் கொடுத்த பேட்டியில், "வளர்ந்ததும் நான் இங்கிலாந்து அணிக்காக விளையாட விரும்புகிறேன். என்னை நான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவனாகத்தான் பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார் பென் ஸ்டோக்ஸ். இந்த பேட்டி, ராஸ் டெய்லருடனான அந்த உரையாடலுக்கு ஒரு ஆண்டு முன்பாகவே வெளியாகியிருந்தது.