கடந்த சில ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பெண்களுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் என்று தெரிகிறது. அந்தத் தொடரை நடத்துவதற்காக ஆண்கள் ஐபிஎல் தொடருக்கு ஏற்படுத்துவது போல் ஒரு மாத 'விண்டோ' ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக பிசிசிஐ உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தத் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி முதல் 26 ம் தேதி வரை பிப்ரவரியில் நடக்கிறது. அந்தத் தொடர் முடிந்த பிறகு மார்ச் மாதத்தில் இந்தத் தொடரை நடத்த பிசிசிஐ அமைப்பின் பெரும் தலைகள் விவாதித்ததாகக் கூறியிருக்கிறார் அவர்.
"ஆம், பெண்கள் ஐபிஎல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும். இந்தத் தொடரை நான்கு வாரங்கள் நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 9 முதல் 26 வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. அது முடிந்த ஒருசில நாள்களிலேயே பெண்கள் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று பெயர் சொல்ல விரும்பாத பிசிசிஐ சீனியர் நிர்வாக ஒருவர் தெரிவித்தார்.
"இப்போதைய சூழ்நிலையில் ஐந்து அணிகளை வைத்து இந்தத் தொடரை நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். ஆனால் ஐந்து என்பது ஆறாக மாறலாம். ஏனெனில் பெண்கள் ஐபிஎல் அணிகளில் முதலீடு செய்ய பலரும் பெரும் விருப்பம் காட்டுகின்றனர். ஒரு சரியான நேரத்தில் அணிகளுக்கான ஏலம் நடப்பது பற்றிய அறிவிப்பு வரும்" என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தாங்கள் கொடுத்த பேட்டிகளில் 2023ம் ஆண்டு பெண்கள் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்பதை உறுதிபடுத்தியிருக்கின்றனர்.
கிரிக்கெட் பிரியர்கள் பலரும் பல ஆண்டுகளாக பெண்கள் ஐபிஎல் தொடர் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் என்றும், உலக அளவிலேயே கூட பெண்கள் கிரிக்கெட்டுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் நம்புகின்றனர்.
"பெண்கள் ஐபிஎல் தொடருக்கு பங்குதாரர்களிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியிருக்கிறது. பல ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பெண்கள் ஐபிஎல் தொடர் பற்றி விசாரித்திருக்க்கிறார்கள். பெண்கள் ஐபிஎல் அணியை வாங்குவது பற்றி தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்" என்று முன்பு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
அதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலியும் 2023ம் ஆண்டு பெண்கள் ஐபிஎல் தொடர் நிச்சயம் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
"அடுத்த வருடம், அதாவது 2023ம் ஆண்டு ஒரு முழுமையான பெண்கள் தொடர் நிச்சயம் நடக்கும் என்று எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. ஆண்கள் ஐபிஎல் தொடரைப் போல் இந்தத் தொடரும் மிகப்பெரிய வெற்றி அடையும்" என்று நம்பிக்கையாகக் கூறினார் கங்குலி.
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் பெண்கள் ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. UTV நிறுவனத்தின் தலைவரான ரானி ஸ்குரூவாலா தானும் பெண்கள் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாக முன்பு ட்வீட் செய்திருந்தார்.