ரவீந்திர ஜடேஜா, தன்னுடைய சீரான பேட்டிங், அசத்தலான ஃபீல்டிங்கின் காரணமாக மூன்று ஃபார்மட்களிலும் இந்திய அணியில் அசைக்க முடியாத வீரராக இடம்பெற்றிருக்கிறார். சமீப காலமாக அவருடைய பேட்டிங் பன்மடங்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. அவருடைய ஃபீல்டிங் எப்போதும்போல் இப்போதும் அட்டகாசமாகவே இருக்கிறது. ஆனால் அவருடைய பௌலிங் இன்னும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.
கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் என எந்த ஃபார்மட்டிலும் அவரால் முன்பைப் போல் விக்கெட்டுகள் எடுக்கவோ, தன் பந்துவீச்சால் பெரும் தாக்கம் ஏற்படுத்தவும் அவரால் முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் அதிகம் ரன்களும் விட்டுவிடுகிறார். இதுபற்றிப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆறாவது அல்லது ஏழாவது வீரருக்கான இடத்தில் தன்னால் தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோருக்குப் பதிலாக அந்த இடத்தில் தன்னால் விளையாட முடியும் என்று நிரூபிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
"ரவீந்திர ஜடேஜா பேட்டிங் ஆல்ரவுண்டராக இருக்கப் போகிறார் என்றால் அவர் ஆறாவது அல்லது ஏழாவது வீரராகக் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக விளையாட முடியும் என்று நிரூபிக்கவேண்டும். இல்லையெனில் ஆறாவது வீரராகக் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரரின் இடத்தை அவரால் நிரப்ப முடியவேண்டும்" என்று கூறியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
அதுமட்டுமல்லாமல் ரவீந்திர ஜடேஜாவுக்கு அக்ஷர் படேல் கடும் போட்டியாக விளங்குகிறார். இடது கை பேட்டிங், இடது கை சுழற்பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் அப்படியே ஜடேஜாவைப் போல் இருக்கிறார். மேலும் கடைசி சில தொடர்களாக சர்வதேச தொடர்களில் தன் பேட்டிங் திறமையை நன்றாக வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைக் கருத்தில் கொண்டால் ஜடேஜாவை விட அக்ஷர் படேல் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். தன்னுடைய பேட்டிங் திறமைகளை பெரிய அரங்கில் முழுமையாகக் காட்ட முடியாமல் தடுமாறிய அவர், இப்போது சிறப்பாக செயல்படத் தொடங்கிவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தின்போது ஒருநாள், டி20 என இரண்டு வகை போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்த அவர், ஒரு ஒருநாள் போட்டியை தனி ஆளாக இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.
இப்போதைய சூழ்நிலையில் அக்ஷர் படேலை விட ஜடேஜா தான் ஒரு சிறந்த பௌலர் என்பதை தேர்வாளர்களுக்கு நிரூபிக்கவேண்டும். அப்போதுதான் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் அவருடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
"அவருடைய இடத்துக்கு பெரும் போட்டி இருக்கிறது என்பது ரவீந்திர ஜடேஜாவுக்கே தெரியும். பௌலிங் ஆல் ரவுண்டராகவா இல்லை பேட்டிங் ஆல் ரவுண்டராகவா... தன்னை எப்படி ஜடேஜா தேர்வாளர்களுக்கு நிருவப்போகிறார் என்பதுதான் இப்போது முக்கியமான விஷயம். அதைப் பொறுத்து அணியில் அவருடைய இடம் முடிவு செய்யப்படும். அவர் பௌலிங் ஆல் ரவுண்டராக அணியில் இடம் பிடிக்க நினைத்தால், அக்ஷர் படேலை விட அவர் சிறந்த பௌலர் என்று நிரூபிக்கவேண்டும். அப்போதுதான் இரண்டாவது ஸ்பின் ஆப்ஷனாக அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
தற்போது ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மோதுகிறது. அந்தத் தொடரில் அக்ஷர் படேல் விளையாடுகிறார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.