2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கல பதக்கம் வென்றது. மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
ஓபன் பிரிவில் இந்திய வீரர் நிகால் சரின் மற்றும் தமிழக வீரர் குகேஷ் ஆகியோர் தங்கம் வென்றனர். அதேபோல், ஓபன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.
பெண்கள் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், வைஷாலி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.