வங்காளதேசத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகீப் அல் ஹசன். உலகின் தலைசிறந்த ஆல் ரௌண்டர்களில் ஒருவராக கருதப்படும் இவர் ஐ.பி.எல் தொடரிலும் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் சர்ச்சையில் சிக்கினார்.
2018-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது ஊழல் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிடத் தவறியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதன்பின்னர் 2019-ம் ஆண்டில் ஐசிசியின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஷகீப் அல் ஹசன் ஏற்றுக்கொண்டதால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒரு வருடத்துக்கு அவர் தடை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் அதேபோன்ற குற்றச்சாட்டில் அவர் சிக்கியுள்ளார். ஷகீப் அல் ஹசன் 'Betwinner News' என்ற சூதாட்ட நிறுவனத்துடன் பிராண்ட் அம்பாஸிடர், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் குறித்து ஷகீப் அல் ஹசன் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வரவில்லை. ஆனாலும் இந்த விவகாரத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்த கூறியுள்ள வாரிய நிர்வாகி ஒருவர், "இது போன்ற விஷயங்களை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இதன் உண்மைத் தன்மை குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.பங்களாதேஷ் நாட்டின் சட்டம் சூதாட்டத்தை அனுமதிக்காது, எனவே இதை சட்டப்பூர்வமாக விசாரித்து இதற்கு விரைவாகத் தீர்வு காண விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஷகீப் அல் ஹசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், இது உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.