இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றிருக்கிறது இந்தியா. மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பியிருந்தாலும், சிறப்பாக விளையாடி சதம் அடித்தார் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அந்தப் போட்டிக்குப் பிறகு யுவ்ராஜ் சிங் பதிவு செய்த ஒரு ட்வீட் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்திய அணி 260 ரன்களை சேஸ் செய்த நிலையில் 109 பந்துகளில் தன் முதல் ஒருநாள் சதத்தை அடித்தார் பண்ட். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் மூன்றாவது முறையாக ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி. ரிஷப் பண்ட்டின் அட்டகாசமான ஆட்டத்தை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டிக்கொண்டிருக்கும் நிலையில், பண்ட்டோடு 45 நிமிடங்கள் பேசியது பற்றி ட்வீட் செய்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங்.
"அந்த 45 நிமிட உரையாடல் ஓரளவு உதவி செய்திருக்கிறது போலவே! சிறப்பாக விளையாடியிருக்கிறாய் ரிஷப் பண்ட். இப்படித்தான் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கவேண்டும். ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது" என்று ட்வீட் செய்திருக்கிறார் யுவ்ராஜ்.
இந்திய அணியின் இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க 2002 நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டியின் 20வது ஆண்டு நினைவு தினத்திற்கு 4 நாள்கள் கழித்து கிடைத்துள்ளது. 326 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணி சேஸ் செய்ய, யுவ்ராஜ் சிங், முகமது கைப் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தப் போட்டியும் கிட்டத்தட்ட நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப் போட்டியைப் போலவே இருந்தது. மிகப்பெரிய இலக்கு இல்லை என்றாலும், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது இந்திய அணி. அப்படியொரு சூழ்நிலையில் தான் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா இருவரும் களத்தில் இணைந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த இந்த இளம் கூட்டணி 133 ரன்கள் விளாசியது. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஹர்திக் பாண்டியா, 55 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். அதில் 10 பௌண்டரிகள் அடக்கம். 36வது ஓவரிலேயே பாண்டியா அவுட் ஆகியிருந்தாலும், அதன்பிறகு கூலாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் ரிஷப் பண்ட்.
இதுதான் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் அடிக்கும் முதல் சதம். கடந்த சில காலமாகவே, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதில்லை என்று ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய விமர்சனம் இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் ஷார்ட் ஃபார்மட்டில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளிலும் 50 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியிருந்தார் பண்ட். அதில் 8 அரைசதங்கள் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியின்போது தன்னுடைய மொத்த திறனையும் காட்டி ஒரு மகத்தான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார் அவர். முதலில் நிதானமாக விளையாடி சதம் அடித்த பண்ட், அதன்பின் ருத்ரதாண்டவம் ஆடினார். டேவிட் வில்லியின் ஓவரில் தொடர்ந்து 5 பௌண்டரிகள் விளாசினார் பண்ட். கடைசியில் ஜோ ரூட் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.