ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. கோவிட் தொற்றுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் முக்கிய சர்வதேச தொடர் என்பதால், இதன் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு சற்று அதிகரித்துள்ளது.
உலகக்கோப்பை என்றாலே மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியாகத்தான் இருக்கும். நடப்பு டி20 தொடரில் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் அரங்கேற இருக்கிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சில மணித்துளிகளிலேயே விற்று தீர்ந்து விட்டதாக ஆஸ்திரேலிய சுற்றுலா கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அக்டோபர் 24 ஆம் தேதி தீப ஒளிதிருநாள் பண்டிகை கொண்டாட இருக்கின்ற நிலையில், முந்தைய நாள் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை என்பது தொடங்கிய கனமே நிறைவடைந்துள்ளது.
40% டிக்கெட் இந்திய ரசிகர்களுக்கும், 27% வட அமெரிக்கா, 18% உள்ளூர் ரசிகர்கள் (ஆஸ்திரேலியா), 15% ஐரோப்பிய மற்றும் மற்ற நாட்டு ரசிகர்களுக்கு என 100% டிக்கெட் விற்பனையை ஆஸ்திரேலியா திட்டமிட்டு செய்திருப்பதாக அந்நாட்டு சுற்றுலா கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் அமரும் வகையில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண மற்ற நாடுகளிலிருந்து சுமார் 50,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண டிக்கெட் விற்பனை முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாகவும், வி.ஐ.பிக்கள் அமர்ந்து பார்க்கும் டிக்கெட் மட்டுமே குறைந்த அளவு கையிலிருப்பதாகவும் கூறும் ஆஸ்திரேலியா சார்பில் கூறப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் தனித்துவமாக பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி இந்த முறையும் ரசிகர்கள் மத்தியில் வரலாற்று போட்டியாகவே பார்க்கப்படுகிறது.