ஐ.பி.எல் 15 வது சீசன் இறுதியை எட்டிவிட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று அஹமதாபாத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியை வெல்லும் அணி சாம்பியன் டைட்டிலோடு கோப்பையை வெல்லும்.
இரண்டு அணிகளுமே கோப்பையை வெல்ல தகுதிவாய்ந்த அணிகள்தான் என்றாலும் ராஜஸ்தான் இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்கு நியாயம் செய்ய கூடுதலாக சில காரணங்களும் இருக்கிறது. அதில் முக்கியமானது ஷேன் வார்னேவுக்கான அஞ்சலி.
பெங்களூருவிற்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் வென்ற தருணத்தில், அந்த போட்டியை ராஜஸ்தானுக்காக வென்று கொடுத்த பட்ல்ரை விடவும் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனை விடவும் இன்னொருவரின் பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. அந்த பெயர் ஷேன் வார்னே. மைதானங்கள் எங்கும் ஷேன் வார்னேவின் பெயர் தாங்கிய பதாகைகளை ரசிகர்கள் ஏந்தியிருந்தனர். கமெண்டேட்டர்கள் ஷேன் வார்னேவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பட்லரும் சாம்சனுமே கூட வார்னேவின் பெயரை குறிப்பிட்டு அவருக்குதான் இந்த வெற்றி சமர்ப்பணம் என பேசியிருந்தனர்.
மறைந்து போன அந்த மனிதரின் பெயர் இப்போது உச்சரிக்கப்படுவதற்கான காரணத்தை அறிந்துக்கொள்ள நாம் 15 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 2008 அது. அப்போதுதான் முதல் முதலாக ஐ.பி.எல் எனும் ப்ரீமியர் லீக் டி20 தொடர் தொடங்கப்பட்டது. அந்த அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வென்றிருக்கும். அந்த அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி சாம்பியனாக மாற்றியவர் ஷேன் வார்னே.
அந்த வெற்றி அவ்வளவு எளிதில் ராஜஸ்தானுக்கு கிடைத்துவிடவில்லை. ஷேன் வார்னே ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஒரு சூப்பர் சீனியராகத்தான் இந்த ஐ.பி.எல் க்கு வந்திருந்தார். ராஜஸ்தான் அணிக்கு அவர் கேப்டன் மட்டுமில்லை பயிற்சியாளரும் கூட. அந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை. On paper லுமே அதை ஒரு வலுவான அணியாக பார்த்திருக்கவில்லை. முழுக்க முழுக்க அனுபவமே இல்லாத இளைஞர்கள் நிரம்பிய அணியாகவே அந்த ராஜஸ்தான் அணி இருந்தது. சூப்பர் ஸ்டார் என்றால் அது ஷேன் வார்னே மட்டும்தான். ஆனால், அவரும் ஓய்வு காலத்தை நெருங்கிய நிலையில் இருந்தார். கடைசி இடத்தை பிடிப்பதற்கான அத்தனை பொருத்தமும் சரியாக அமைந்திருந்த அணியாகவே ராஜஸ்தான் பார்க்கப்பட்டது.
ஆனால், ஷேன் வார்னே அதையெல்லாம் தனது ஆளுமையால் மாற்ற தொடங்கினார். இளம் வீரர்களுக்கு ஹெட்மாஸ்டராக இருந்து கண்டிப்போடு ஆலோசனை சொல்லாமல் தோளில் கை போட்டுக் கொண்டு பார்டி செய்து கொண்டே ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். வீரர்களை பயங்கரமாக ஊக்குவித்தார். அந்த 2008 லேயே ஜடேஜாவை ராக் ஸ்டார் என புகழ்ந்திருந்தார். ட்ரெஸ்ஸிங் ரூமை ஒரு கொண்டாட்ட மனநிலையோடு வெற்றியை நோக்கி நகர்த்தினார். இளம் வீரர்களிடமிருந்தும் எதிர்பார்க்காத அசத்தல் ரிசல்ட் கிடைக்க தொடங்கியது. வெற்றிகள் தொடர்ந்தன. இறுதிப்போட்டிக்கு ராஜஸ்தான் முன்னேறியது. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை ராஜஸ்தான் எதிர்கொண்டிருந்தது.
ராஜஸ்தானுக்கு 164 ரன்கள் டார்கெட். போட்டி கடைசி பந்து வரை சென்றிருக்கும். கடைசி பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற சூழலில் தன்வீர் ஸ்ட்ரைக்கில் இருப்பார். இன்னொரு முனையில் நின்ற ஷேன் வார்னேக்கு தசைப்பிடித்து வலி வாட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், சாம்பியன் ஆக வேண்டுமெனில் இந்த பந்தில் ரன் ஓடியே ஆக வேண்டும். அந்த பந்தை தன்வீர் தட்டிவிட வார்னே தசைப்பிடிப்பு வலியோடு ஓடி ராஜஸ்தானை கரை சேர்த்திருப்பார். ராஜஸ்தான் சாம்பியன் ஆனது.
அந்த சீசனுக்கு பிறகு கடந்த ஆண்டு வரை எந்த சீசனிலும் ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றதே இல்லை. இந்த சீசனில்தான் மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்திருந்தார். வீரராக இல்லாவிடிலும் கடந்த சீசன் வரை ஷேன் வார்னே ஒரு ஆலோசகராக ராஜஸ்தான் அணியுடனேதான் இருந்தார். அவர் இல்லாத முதல் ஆண்டில் இப்போது ராஜஸ்தானுக்கு கோப்பையை வெல்லும் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ராஜஸ்தான் வெல்லும்பட்சத்தில் அதுதான் ஷேன் வார்னேவுக்கான சரியான அஞ்சலியாக இருக்கும்!