இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் தொடங்கியிருக்கிறது. முதல் நாளிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. சில நிமிடங்களுக்கு முன் முடிந்த இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்திருக்கிறது.
இந்தியா சார்பில் அந்த ஒரு கோலை அடித்தவர் தமிழக வீரரான கார்த்தி செல்வமே. அரியலூர்க்காரர். இந்திய அணிக்காக அவரின் முதல் போட்டியே இதுதான். முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கோலை அடித்து மறக்க முடியாத அறிமுகத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் கார்த்தி, மாரீஸ்வரன் என இரண்டு தமிழக இளைஞர்களும் இடம்பிடித்திருந்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பிடித்ததே பெருமைமிக்க விஷயமாக பார்க்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பீரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய அணியில் தொடக்க லெவனிலேயே கார்த்திக்கு இடம் கிடைத்திருந்தது.
முதல் கால்பகுதியிலேயே கார்த்தி கோல் அடித்துவிட்டார். ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்திலேயே ஒரு பெனால்டி வாய்ப்பில் ட்ராக் ஃப்ளிக் செய்து கோல் ஆக்கினார். இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் 8 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்திருந்தது. அவற்றில் கார்த்தி மட்டுமே கோல் அடித்திருந்தார்.
இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் 8 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்திருந்தது. அவற்றில் கார்த்தி மட்டுமே கோல் அடித்திருந்தார். கார்த்தி அடித்த கோல் இந்தியாவிற்கு போட்டியையே வென்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கடைசி ஒரு நிமிடம் இருக்கும்போது பாகிஸ்தான் ஒரு கோலை அடித்து போட்டியை ட்ரா செய்துவிட்டது.
முடிவுகளை தாண்டி தமிழ்நாட்டு வீரர் ஒருவர் நன்றாக ஆடி கோல் அடித்திருக்கிறார் என்பதே மகிழ்வை கொடுக்கும் விஷயம்தான். அரியலூரிலிருந்து புறப்பட்டு இந்தோனேஷியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமாகி முதல் கோலை அடிப்பது சாதாரண விஷயமல்ல. தமிழக வீரர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார்கள் என்பதே பெரும் ஊக்கத்தை கொடுத்தது.
இந்நிலையில் அவர்கள் சிறப்பாகவும் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கும் உதவுவார்கள் எனில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி அடுத்தடுத்து மோதவிருக்கிறது. அதிலும் செல்வம் கார்த்தி முக்கிய வீரராக இருப்பார். அவர் இன்னும் பெரிதாக வெல்ல வேண்டும் என்பதே ஹாக்கி விரும்பிகளின் எண்ணமாக இருக்கிறது.