டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்த போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. டெல்லி அணிக்காக டேவிட் வார்னரும் ரோவன் பவலும் மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர்.
டேவிட் வார்னர் 92 ரன்களை அடித்திருந்தார். ஆனால், டேவிட் வார்னர் அடித்த இந்த 92 ரன்களை விட அவர் தவறவிட்ட அந்த சதத்திற்காகவே அவர் பெரிதாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார். டெல்லி அணி முதலில் பேட் செய்த போது ஓப்பனராக இறங்கிய டேவிட் வார்னர் கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். மிகச்சிறப்பாக ஆடினார். இவரோடு ரோவன் பவல் கூட்டணி சேர்ந்து அவரும் மிரட்டலான ஆட்டத்தை அதிரடியாக ஆடியிருந்தார்.
வார்னர் தொடக்கத்திலிருந்தே ஆடியதால் ஒரு கட்டத்தில் அவர் சதமடிப்பதற்கான வாய்ப்பு தென்பட தொடங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய 19 வது ஓவரில் மூன்று பவுண்டரிக்களை அடித்து 90களுக்குள் வார்னர் புகுந்தார். அந்த ஓவர் முடியும்போது வார்னரின் ஸ்கோர் 92. கடைசி ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். ஸ்ட்ரைக்கில் ரோவன் பவல் இருந்தார். இந்த ஓவரில் குறைந்தபட்சமாக 2 பந்துகள் கிடைத்துவிட்டால் கூட வார்னரால் சதத்தை நிறைவு செய்து விட முடியும். இதை வார்னரை விட பவல் நன்றாக உணர்ந்திருந்தார்.
'நான் வேண்டுமானால் உங்களுக்கு சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை தரவா?' என ரோவன் பவல் வார்னரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, 'அதெல்லாம் வேண்டாம். கிரிக்கெட்டை அப்படியெல்லாம் ஆடக்கூடாது. அடித்து ஆடு.' என வார்னர் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்தே அந்த ஓவர் முழுவதும் ரோவன் பவல்லே ஸ்ட்ரைக்கில் இருந்து அடித்து வெளுத்தார். பவல் ஒவ்வொரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்த போது அவரைவிட எதிர்முனையில் நின்ற வார்னரே துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தார்.
அணியே பிரதானம். வீரர்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள். தனிப்பட்ட பலன்கள் எல்லாமே அதற்கு பின்புதான் என்கிற வார்னரின் இந்த அணுகுமுறையே நேற்றைய போட்டியில் ஹைலைட்டாக அமைந்தது. நேற்றைய போட்டியில் என்றில்லை. வார்னர் எப்போதுமே இதே மனநிலையுடன் தான் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார். கடந்த ஐ.பி.எல் சீசன் அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. சன்ரைசர்ஸூக்காக ஆடியிருந்த அந்த சீசனிக் பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியிருந்தார். கூடவே அணியும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே இருந்தது.
இதனால் ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பதவியை வார்னரிடமிருந்து பறித்து கேன் வில்லியம்சனிடம் கொடுத்தது. கேப்டன் பதவி பிடுங்கப்பட்டதோடு அல்லாமல் வார்னருக்கு ப்ளேயிங் லெவனிலேயே இடம் கொடுக்காமல் பென்ச்சில் வைத்தனர். அப்போதும் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் வகையிம் தோரணையாக குழப்பங்களை ஏற்படுத்தாமல், பென்ச்சில் இருக்கும் போதும் அணிக்காக தன்னால் என்ன செய்ய முடியும் என யோசித்தார். வீரர்களுக்கு தண்ணீர் பாட்டிலை தூக்கிக் கொண்டு பெவிலியனுக்கும் பிட்ச்சுக்கும் இடையே மாறி மாறி வாட்டர் பாயாக ஓடிக்கொண்டிருந்தார்.
கோவிட் காலத்தில் அணிகள் குறைவான வீரர்களையே ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு அழைத்து வர வேண்டிய சூழலில் சன்ரைசர்ஸ் அணி வார்னரை கழட்டிவிட்டது. சன்ரைசர்ஸ் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிலேயே அவருக்கு இடமில்லாமல் போனது. அப்போதும் தன்னுடைத நட்சத்திர அந்தஸ்த்தை முன் நிறுத்தி நிர்வாகத்தோடு முறுக்கிக் கொண்டு நிற்காமல், பார்வையாளர்கள் வரிசையில் கேலரிக்கு வந்து அமர்ந்து அணியின் கொடியை கையிலேந்தி தன் சக வீரர்களை ஆர்ப்பரிப்போடு உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இதுதான் வார்னர். அவர் கிரிக்கெட்டிற்காக, தன்னுடைய அணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அதில் தன்னுடைய நலன்கள் அடிபட்டாலும் சரி, அவர் எப்போதும் அணிக்காக மட்டும்தான் நிற்பார். இப்படியான மனநிலை கொண்ட வீரர்கள்தான் இந்த விளையாட்டின் ஆன்மாவை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர்.