மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த போட்டியிலும் தோற்று எட்டாவது தோல்வியை அடைந்திருக்கிறது. இதன்மூலம் இந்த தொடரின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பையும் முழுமையாக இழந்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் எங்கே கோட்டைவிட்டது?
மும்பை இந்தியன்ஸ் அணி மும்பையின் வான்கடே மைதானத்தில் கிட்டத்தட்ட 1083 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் களமிறங்கியிருந்தது. வான்கடே மைதானத்தை பொறுத்தவரைக்கும் இங்கே கடைசியாக ஆடப்பட்டிருக்கும் மூன்று போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணிதான் வென்றிருக்கிறது. மேலும், லக்னோ அணி இந்த மைதானத்தில் ஆடியிருந்த இரண்டு போட்டிகளையுமே தோற்றிருக்கிறது. அந்த இரண்டு போட்டிகளிலுமே லக்னோ அணியின் கேப்டன் ராகுலும் டக் அவுட் ஆகியிருக்கிறார்.
இதையெல்லாம் மனதில் வைத்து டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்யாமல் 'வான்கடே மைதானத்தை பற்றி எங்களுக்கு தெரியும். இது சேசிங்கிற்கு உகந்த மைதானம்' எனக்கூறி சேஸிங்கை தேர்வு செய்தார். ரோஹித்தின் டாஸ் முடிவிற்கு மாறாக தலைகீழாகத்தான் அங்கே எல்லாம் நடந்திருந்தது.
வான்கடேவில் ஆடிய இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருக்கும் ராகுல், இந்த போட்டியில் சதமடித்தார். இந்த போட்டி மட்டுமில்லை. இதற்கு முன்பு இதே தொடரில் மும்பைக்கு எதிராக ஆடிய போட்டியிலும் ராகுல் சதமடித்திருந்தார். அந்த போட்டியிலும் ராகுலின் விக்கெட்டை மும்பையின் பௌலர்களால் வீழ்த்தவே முடியவில்லை. இந்த போட்டியிலும் ராகுலின் விக்கெட்டை மும்பையின் பௌலர்களால் வீழ்த்தவே முடியவில்லை. குட் லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளை பார்த்தே ஆடியிருந்தார். அப்படி வந்த பந்துகளில் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 54 தான்.
அதேநேரத்தில், ஃபுல் லெந்த்தில் வந்த பந்துகளில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 312. ஷார்ட் பிட்ச்சாக வந்த பந்துகளில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250. மும்பை பௌலர்கள் இன்னும் அதிகமாக குட் லெந்த் பந்துகளை வீசியிருந்தால் ராகுலை தடுமாற செய்து அவரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்க முடியும். ஆனால், அதை விடுத்து ஸ்லாட்டிலேயே அதிக டெலிவரிக்களை வீசிக்கொண்டிருந்தனர். அதற்கான பலனை மும்பை அனுபவித்தது. ராகுல் 62 பந்துகளில் 103 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
ராகுல் சதமே அடித்திருந்தாலும் மும்பைக்கான டார்கெட் என்னவோ 169 மட்டும்தான். நவீன டி20 காலத்தில் இது ஒரு பெரிய ஸ்கோரே இல்லை. ஆனாலும், மும்பை அணி திணறியது. டார்கெட்டை எட்ட முடியாமல் கோட்டைவிட்டது. தொடக்கத்திலிருந்தே மும்பைக்கு எல்லாமே சொதப்பல்தான். 20 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்களை மட்டுமே இஷன் கிஷன் எடுத்திருந்தார். 7.1 வது ஓவரில் ரவி பிஷ்னோயின் பந்தில் இஷன் கிஷன் அவுட் ஆகியிருந்தார். அதுவரையிலான 43 பந்துகளில் 20 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்கள் என்பதையும் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 40 தான் என்பதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற சீனியர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திலக் வர்மா மட்டும் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஆனால், அவராலும் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்க முடியவில்லை.
டெத் ஓவர்களில் மும்பை அணியின் ஆபத்பாந்தவனாக இருந்த பொல்லார்டும் இப்போதெல்லாம் சோபிப்பதே இல்லை. நேற்று மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 72 ரன்கள் தேவைப்பட்டது. அதவாது, ஓவருக்கு ஏறக்குறைய 14 ரன்கள். பொல்லார்ட் க்ரீஸில் இருந்த இந்த சமயத்திலும் மும்பை அணியால் ஒரு ஓவரில் 14 ரன்களை தாண்ட முடியவில்லை. நல்ல திட்டமிடலுடன் கூடிய லக்னோவின் பந்துவீச்சினால் பொல்லார்ட் திணறடிக்கப்பட்டார். ஒரு ஓவரில் ஷார்ட் பால்களாலும் ஒரு ஓவரில் ஒயிடு யார்க்கர்களாலும் ஹோல்டர் திணறடித்தார். சமீரா ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பந்தை ஆங்கிள் அவுட் செய்து அசத்தினார். அனுபவமற்ற மோஷின் கானை கூட பொல்லார்டால் அட்டாக் செய்ய முடியவில்லை. கடைசி 3 ஓவர்களிலெல்லாம் வெறும் 13 ரன்கள் மட்டும்தான் வந்திருந்தது. பொல்லார்ட் 20 பந்துகளில் 19 ரன்களை எடுத்து மும்பையின் தோல்வியை உறுதியாக்கி கடைசி ஓவரில் அவுட் ஆகியிருந்தார்.
சீனியர் வீரர்கள் யாருமே முனைப்போடு முன்வந்து உத்வேகமான இன்னிங்ஸை ஆடாததே மும்பை அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதைத்தான் 'Unspirited' என மேத்யூ ஹேடன் மும்பை குறித்த விமர்சனமாக முன் வைத்திருந்தார். தொடரையே இழந்தாயிற்று இனியாவது எந்த அழுத்தமும் இல்லாமல் முனைப்பு காட்ட முன் வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.